June 24, 2017 findmytemple.com
சுவாமி : நாமபுரீஸ்வரர்.
அம்பாள் : தர்மசம்வர்த்தினி அம்பாள்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு :
இவ்வாலயத்தில் லிங்கோத்பவர் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயர்க்கும் தனிக்கோவிலும், அதன் எதிர்புறம் மகாலட்சுமி சன்னதியும் தனிக் கோவிலாக இருப்பது சிறப்புக்குரியது. இந்த ஆலயத்தில் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கி பயன் அடைகிறார்கள். இந்த ஆலயத்தில் சனி பிரதோஷத்தை விடவும், புதன்கிழமை வரும் பிரதோஷம் மிக சிறப்பானது. பிரதோஷ காலத்தில் வழிபடும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். புதனுக்கு, சனிஸ்வரனுக்கு ஆதிதேவதையாக மகாவிஷ்ணு அமைந்து உள்ளதால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி, புதன் கிரகதோஷங்கள் நீங்கப்பெறுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல், தை மாதம் 10ம் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்கின்ற அற்புதமாக காட்சி அளிக்கிறது. அந்த அற்புத நிகழ்வை மூன்று நிமிடமே காணலாம்.
தல வரலாறு :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள(சிவன் கோவில்) ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரிஸ்வரர் திருக்கோவில் 700 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருக்கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் 1305-ல் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த சிவாலயத்தில் 35 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னராலும் சமரசம் செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே போல் சோழர் கால பாண்டியர் கால கல்தூண்கள் இணைத்தே காணப்படுகிறது. காசி புராணத்தில் இவ்ஆலயத்தை பற்றிய செய்திகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ஆலயத்தின் தலவிருட்சம் காசி வில்வம் விளங்குகிறது. இந்த ஆலங்குடி பழைய பெயர் கிடாரம் கொண்ட சோழபுரம் என்றும், மற்றொரு பெயர் பேரூர் ஆண்டாள் என்றும் அழைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டில் தெரிகிறது. இக்கோவில் தை மாதம் 14ம் தேதி 28-1-2007 மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
கோயில் முகவரி : அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில்,ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.