June 24, 2017 தண்டோரா குழு
சென்னை – கன்னியாகுமரி இடையே கடலோர இருப்பு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.
அப்போது பேசிய அவர், சென்னை – கன்னியாகுமரி இடையே கடலோர இருப்பு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் மட்டும் இந்த பாதை அமைக்க முடியாது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வேளச்சேரி – பரங்கிமலை ரயில்பாதை பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்றார்.
விழாவில் சென்னை -திருவொற்றியூர் இடையிலான 4ஆவது ரயில் பாதையை அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் கருத்துரு வந்த பின்னர், இது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார்.