May 16, 2016 தண்டோரா குழு.
தங்கள் குழந்தைகளின் சிறிய வயது புகைப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டால் 35,000 பவுண்டு அபராதம் அல்லது சிறைத்தண்டனை என்று பெற்றோர்களை எச்சரித்துள்ளது பிரான்ஸ் அரசு.
பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் சிறிய குழந்தைகளின் சுட்டித்தனமான செயல்களையும், அடாவடித் தனங்களையும் புகைப்படமெடுத்து இணையதளத்தில் பதிவு செய்வதில் அலாதிப் பிரியம். குழந்தைகள் தானே என்று அரை குறை ஆடைகளோடு பதிவு செய்பவர்களும் உண்டு.
ஒருவர் செய்வதன் மூலம் மற்ற பெற்றோர்களும் அவரவர் குழந்தைகளின் பிரதாபங்களை முகநூலில் பறைசாற்றுவார்கள்.
சிறிய வயது செயல்களும், உருவப்படங்களும் குழந்தைகள் பெரிதாகும் போது அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது. அவ்வாறு ஏற்படுமாயின் தங்கள் தனியுரிமையில் தலையிட்ட காரணத்திற்காக பெற்றோர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. தண்டனையாக 35,000 பவுண்டு அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம் என்றும் பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நிலவும் தனியுரிமைச் சட்டப்படி குழந்தைகளின் தனியுரிமையில் தலையிட எந்தப் பெற்றோர்களுக்கும் அனுமதி கிடையாது.
இந்த நவீன யுகத்தில் எந்த நிகழ்வுகளும் அவை நல்லவையோ அல்லது தீயவையோ உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு விடுகின்றன. அதே போல் மற்றவர்களுடைய அந்தரங்கம் அவருடைய அனுமதியில்லாமலேயே அலசப்படுகிறது.
இங்கிலாந்து நடத்திய ஆய்வின் படி பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளை பலவிதமான தோற்றத்திலும், விதவிதமான ஆடை அலங்காரத்தோடும் புகைப்படமெடுத்து முக நூலில் உலவ விடுகின்றனர். வருடத்திற்கு 200 படங்களென்று 5 வயதிற்குள் கிட்டத்தட்ட 1,000 படங்கள் மூலம் குழந்தைகளின் அந்தரங்கத் தகவல்களைப் பரப்புகின்றனர்.
உதாரணமாகச் சிறிய வயதில் குழந்தை குளிக்கும் காட்சி அக்குழந்தைக்கு 13 அல்லது 14 வயதில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும். இதேப் போன்று சிறிய வயதில் ரசிக்கத் தோன்றுவது வயதாகும் போது ரசிக்கும் படியாக இருக்காது. அவர்களுக்குச் சங்கடத்தையே விளைவிக்கும் என்று குழந்தை மன நல மருத்துவர் காதரின் ஸ்டீனர் அடான் கூறியுள்ளார்.
குழந்தைப் பருவத்து மொத்த தகவல்களும் வெட்ட வெளிச்சமாகி விடுவதால் அவர்களது பிற்கால வாழ்க்கை மிகுந்த சிக்கலாகி விடுகிறது. அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடுகிறது. பல தகவல்கள் பிறரால் தவறாகப் பயன்படுத்த ஏதுவாகிறது. சில சமயம் மற்றவர்களின் கேலிக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
10 முதல் 17 வயது இளைய சமுதாயத்தினர் இத்தகைய தர்ம சங்கடத்தை விரும்புவதில்லை என்று மெட்ரோபாலிடன் யுனிவர்சிட்டி பேராசிரியர் நிக்கோலா வயிட்டன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிற்காலத்தில் தங்களுடைய செயலால் எந்தவித வில்லங்கமும் வராதவாறு பெற்றோர்கள் செயல் பட வேண்டும். இது வேறு ஒரு தனிநபர் சம்பந்தப்பட்டது. 15 வருடங்களுக்குப் பிறகு இது போன்றவற்றை இளைய சமுதாயம் விரும்பாமல் போகலாம்.
ஒரு நல்ல இயற்கை காட்சியையோ, அல்லது அரியப் புகைப்படத்தையோ முக நூலில் பதிப்பது தவறில்லை. மற்றவர்களை எந்த விதத்திலும் பாதிக்காத எந்தச் செயலும் வரவேற்கத்தக்கதே.
இதுபோன்ற வேறுபாடான பதிப்புகளைத் தங்கள் குடும்ப அளவில் உள்ள தளத்தில் மட்டும் பகிர வேண்டுமே தவிர பொதுவான தளத்தில் பகிர்வதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர் தங்களது தனிப்பட்ட அமைப்புக்களைப் பரிசோதிப்பதே இல்லை.
உதாரணமாக ஒரு விளையாட்டு மைதானத்தில், விளையாட்டில் கவனம் செலுத்தி, வெற்றி பெற முற்பட வேண்டுமேயன்றி, தங்கள் பெற்றோர்களின் புகைப்படக் கண்களுக்காக போலித் தோற்றத்துடன் காட்சியளிக்க முற்பட வேண்டிய சூழ்நிலை உருவாக்குவது தவறு என்று குழந்தைகள் குற்றம் சாட்டுகின்றனர்.