June 29, 2017 தண்டோரா குழு
சீனாவில் மூட நம்பிக்கையால் சில்லறை நாணயங்களை விமானத்தின் இன்ஜினில் வீசிய மூதாட்டிக்கு சிறை தண்டனை மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 80 வயது மூதாட்டி தனது குடும்பத்தினருடன் பயணம் செய்யவிருந்தார். அந்த மூதாட்டி விமானத்தில் ஏறும் முன், மூட நம்பிக்கையால் 9 சில்லறை நாணயங்களை விமானத்தின் இன்ஜினில் வீசியுள்ளார்.
அவர் செய்த செய்கையால் சந்தேகம் அடைந்த மற்றொரு பயணி காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்களும், விரைந்து வந்து அந்த மூதாட்டியை விமானத்திலிருந்து இறக்கி அழைத்து சென்றுள்ளனர்.
விமான நிலைய காவல்துரையினர் அந்த மூதாட்டியை விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில், அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால்,அவரும் அவருடைய குடும்பத்தாரும் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையால் அவர் நாணயங்களை வீசியுள்ளார்.
அவர் செய்த தவறுக்கு 5 நாள் சிறைத்தண்டனை வழங்கலாம். ஆனால், அவருடைய முதிர்ந்த வயது காரணமாக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.