June 29, 2017 tamilsamayam.com
சினிமா டிக்கெட்டின் மீதான வரியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், நடிகர் கமல் ஹாசன் கூறியது போல் சினிமாவை விட்டு விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சினிமா டிக்கெட்டின் மீது போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் திரைத்துறையை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று முன்பு கமல் அவர்கள் கருத்து தெரித்திருந்தார் . ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் சினிமாவிற்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா டிக்கெட்டின் விலையும் ஜூலை 1ஆம் தேதி முதல் உயர இருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 100 ரூபாய் டிக்கெட்டை ரூ. 120 ஆகவும், ரூ. 120 ரூபாய் டிக்கெட்டை ரூ. 150 ஆகவும் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரியின்படி, ஏற்கனவே 100 ரூபாய்க்கு மேல் இருக்கும் டிக்கெட்டுக்குத்தான் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், இதற்கு குறைவான டிக்கெட்டிற்கு 18 சதவீத வரி இருக்கும் என்றும் கூறப்பட்டது.
தென் இந்திய வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல் ஹாசன் பேசுகையில், ” சினிமா என்பது சீட்டாட்டம் அல்ல அது ஒரு கலை.எனவே அதை மத்திய அரசு கருத்தில்கொண்டு விலக்கு அளிக்க வேண்டும். அதிக பணச்செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படத்திற்கும் தமிழ் படத்திற்கும் ஒரே வரி விதிப்பது முறையான செயல் அல்ல. அதிக அளவில் மக்கள் பேசும் இந்தி மொழியில் எடுக்கப்படும் படத்திற்கும் தமிழ் படத்திற்கும் ஒரே வரி விதிப்பது நியாயம் இல்லை.
பிராந்திய படங்களுக்குத்தான் அதிக விருதுகள் கிடைக்கிறது. அதிகப்படியான தமிழ் படங்கள் குறைந்த பட்ஜெட்டில்தான் எடுக்கப்படுகிறது . அவர்களை இந்த வரி விதிப்பு பாதிக்கும் . என்னைப் போன்ற அதிக சம்பளம் பெரும் நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். சினிமாவில் குறைந்த கூலி வாங்கும் நடிகர்கள்தான் அதிகம். எனவே தமிழக அரசு இந்த வரி விதிப்பை ஏற்கக்கூடாது மேலும் தமிழக அரசு தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். வரியை குறைக்காவிட்டால் நான் திரையுலகை விட்டு விலகுவேன்” என்றார்.
தற்போது உலக நாயகன் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது. எனவே உலக நாயகன் திரைதுறையை விட்டு விலகுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.