May 17, 2016 தண்டோரா குழு.
செயின்ட் பிரான்ஸிஸ் கான்வெட் தன் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவனின் தந்தையிடம்
ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ராவில் மதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் சிறுபான்மை கிருத்துவப் பள்ளி செயின்ட் பிரான்ஸிஸ் கான்வெட். இதில் 14 வயது மொஹமட் ஷாசான் 8ம் வகுப்புப் பள்ளி மாணவன்.
ஷாசான் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று பள்ளி நிர்வாகம், ஷாசானின் தந்தையிடம் தெரிவித்துள்ளது. இதையறிந்த ஷாசானின் தந்தை சாகிர் அஹமத் தனது மகனின் பரீட்சை மதிப்பெண்களைக் காண்பிக்குமாறு பணித்துள்ளார். நிர்வாகம் அதை மறுத்துள்ளது. ஆக்ராவின்
கல்வி அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளார். ஆனால் அந்த அதிகாரிகள் தலையிட்டும் கூட
நிர்வாகிகளின் முடிவை மாற்றமுடியவில்லை.
தனது மகனின் கல்வித் தகுதியை விரிவான மதிப்பீடு செய்யும் படியும், மறு பரிசீலனை செய்யும் படியும் பலமுறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததோடு மட்டுமல்லாது பரிமாற்றச் சான்றிதழைக் கொடுத்துள்ளது.
வேறு வழியறியாத காரணத்தினால் ஷாசானின் தந்தை சாஹிர் அஹமத் வழக்கறிஞர் ஹெச்.டி.சக்சேனா மூலம், பள்ளி நிர்வாக வழக்கறிஞர் சுரேந்திர குமார் குப்தாவிற்கு ஒரு சட்ட
ரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பள்ளி நிர்வாகம் பாரபட்சத்தினால் தன் மகனைத் தேர்ச்சி பெறச் செய்யவில்லை என்றும், தான் முன்பு ஒரு முறை பள்ளி நிர்வாகத்திடம் அதிக தொகை வசூலித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை
மனதில் வைத்துக் கொண்டு தனது மகனைப் பழி வாங்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வித் துறையின் விதிப்படி 1 முதல் 8 வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகளை அதே வகுப்பில் தக்கவைப்பது குற்றமாகும். இந்த ஆணையின் நகலையும் இணைத்து நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.
சாஹிர் அஹமதின் நோட்டீஸுக்கு நிர்வாகம் பதிலளிக்கையில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மிகவும் அற்பமானவை
என்றும் தெரிவித்தது.
மேலும் கல்வித்துறையின் இந்த விதி இயல்பிற்கு முரணானது. மதச் சார்புடைய இந்தப் பள்ளியில் இந்த விதி அமுலாக்கப் படவேண்டிய கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கல்வித் துறை அதிகாரி களிக்குக் கூடக் கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்தது அது மட்டுமல்லாது ஷாசான் கல்வித் தகுதி மிகவும் மோசமாக இருந்த படியால் மாணவனது தந்தையின் விருப்பப்படியே TC வழங்கப் பட்டது என்றுள்ளது.
தங்கள் பள்ளியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் . வகையிலும், நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுத்த சாகிர் மீது நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு
கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியது.
அத்தொகையையும் 15 நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் ,தவறினால் மாதத்திற்கு 1% வீதம் வட்டி கொடுக்கவேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுபற்றிய கேள்விக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.சான்டினா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சமூக ஆர்வலர் தான்வன் குப்தா எப்படியும் சஹான் க்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்றும்,பள்ளி நிர்வாகம் சர்வாதிகாரப் போக்கோடும் ,பாரபட்சத் தன்மையோடும் நடந்து கொள்கிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வீட்டை விற்றாலும் கூட இத்தகைய தொகையைப் புரட்டுவது கடினம்.தானும் தன் குடும்பத்தினரும் அனைத்துக் கோயில்களுக்கும், சர்ச்களுக்கும், மசூதிகளுக்கும் முன்பு சென்று பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.