July 3, 2017 தண்டோரா குழு
எங்கள் வலியை நீங்களும் உணரவே இந்த நாடகம் என “மஞ்சள்” நாடக நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித் பேசியுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது.
இந்த நாடகம், சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தது. ஜெயராணி எழுத்தில் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில் கலைஞர்கள் நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றினர்.
‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், கனிமொழி, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன், சதானந்த் மேனன், மதிவண்ணன், சத்யராஜ், கலையரசன், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, மீரா கதிரவன், சுசீந்திரன், உஷா, லெனின் பாரதி, ஆடம் தாசன், எங்கேயும் எப்போதும் சரவணன், நலன் குமரசாமி, ஸ்ரீகணேஷ், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், நிரோ பிரபாகர், கவிஞர் உமாதேவி, கவிஞர் சல்மா, அஜயன் பாலா, ஆனந்த் குமரேசன், முருகன் மந்திரம், முத்தமிழ் கலைவிழி, கவிதா முரளிதரன், கவின்மலர், பிரேமா ரேவதி, திவ்யபாரதி, விஜி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்,
‘இத்தனை நாள் எங்க வலியா மட்டுமே இது இருந்துச்சு. அத நீங்களும் உணரணும்னு தான் இதை நாடகமா போட்டோம். எந்த ஒரு விசயமும் கலை மூலமா போகும்போதுதான் ஒரு விஷயம் நிறைய மக்களை சென்றடையும். அதுதான் நம்ம இலக்கு. இது நமக்கான உரிமை, நாமளே அதை எடுத்துக்குவோம் என்றார்.
இந்த நிகழ்வில் ஒரு அங்கமாக கையால் மலம் அள்ளுவதற்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் களப்பணி ஆற்றுகிற, கொண்டை வெள்ளை, அன்புவேந்தன், “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், மஞ்சள் வண்ணம், மலத்தையும் அடையாளப் படுத்துவதால், அதற்கு எதிராக, நிரோ பிரபாகர் இசையில், ஜெயராணி எழுதியுள்ள “மஞ்சள் எதிர்ப்புப்பாடல்” (Anti Yellow – Compaign Song) வெளியிடப்பட்டது.