July 3, 2017 தண்டோரா குழு
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்த அதே நேரத்தில், ராஜஸ்தானில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு ‘ஜி.எஸ்.டி’ என்று பெயர் சூட்டிய சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரி வரியான ஜி.எஸ்.டி முறையை மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு கொண்டு வந்தது. இந்த வரியை சிலர் ஏற்றுக்கொண்டாலும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள பியாவார் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில், ஜூலை 1-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய், அதற்கு ‘ஜி.எஸ்.டி’ என்று பெயர் சூட்டியுள்ளார். அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி குழந்தை பிறந்ததின் மகிழ்ச்சியை அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூழ அந்த குழந்தையுடன் செல்பி எடுத்து, அதை இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதை கண்ட மக்கள், அந்த குழந்தைக்கு தங்கள் வாழ்த்து செய்திகளையும், பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, “நீண்ட ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்க”” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.