July 5, 2017 தண்டோரா குழு
பெங்களூரில் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு மரக்கன்று மற்றும் தலை கவசத்தை(Helmet) பரிசாக வழங்கிய திருமண தம்பதிகளை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
பொதுவாக திருமண விழாவிற்கு வரும் விருந்தாளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பரிசு பொருள்களை வழங்குவது வழக்கம். ஆனால், கர்நாடக மாநிலத்தின் பீடார் நகரத்தில் சிவ்ராஜ் ஜமாதர்(27) என்பவருக்கும் சவித்தா என்பருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மரக்கன்று மற்றும் தலைகவசத்தை மணமகனும் மணமகளும் பரிசாக வழங்கியுள்ளனர்.
இது குறித்து மணமகன் சிவ்ராஜ் கூறுகையில்,
“நான் 1௦ம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு படித்துள்ளேன். தற்போது பீடார் நகரில் மோட்டர் ட்ரிவிங் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறேன். பீடார் நகரில் நடக்கும் திருமண விழாக்கள் மிக ஆடம்பரமாக நடைபெறும். அந்த விழாக்களில் மது மற்றும் இசை நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.
ஆனால் என்னுடைய திருமணத்தை ஒரு அர்த்தமுள்ள முறையில் நடத்த விரும்பினேன். தலைகவசம் அணியாத காரணத்தால், பல சாலை விபத்துக்களில் பல உயிர்கள் இறந்து போவதை குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். தலைகவசத்தை விருந்தினர்களுக்கு வழங்கினால், நலமாக இருக்கும் என்று எனக்கு யோசனை தோன்றியது.
மது மற்றும் இசை நிகழ்ச்சிக்கு சுமார் 3௦,௦௦௦ ரூபாய் முதல் 5௦,௦௦௦ ரூபாய் வரை செலவாகும். அதே பணத்தொகைக்கு 1௦௦ தலைகவசம் வாங்கினேன். நாம் தரும் தலைகவசத்தை 80 பேர் பயன்படுத்தினாலும், அது ஒரு சாதகமாக கூட இருக்கும். நாம் தரும் மரக்கன்றுகள் பலன் தந்தால், அது நமக்கும் வருங்கால தலைமுறைக்கு பெரிய நலனை கண்டிப்பாக தரும்.
இதற்கு முன்பு, திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமகனுக்கு தலைகவசத்தை பரிசாக வழங்கியுள்ளேன். சாலை விபத்தில் சிக்கிய இரண்டு பேர், நான் தந்த தலைகவசத்தால் உயிர்பிழைத்ததாக என்னை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு நன்றி கூறியுள்ளனர்” என்று கூறினார்.
சிவ்ராஜின் திருமணத்தில் கலந்துக்கொண்ட நாகஷெட்டி என்பவர் கூறுகையில்,
“சிவ்ராஜ் தந்த பரிசு சிலருக்கு முதலில் விசித்திரமாக இருந்தது. தலைகவசத்தை பரிசாக பெற்ற பலர், அவரை மனமாற பாராட்டினர். பீடார் நகரில் நடந்த திருமணங்களில் இது போன்ற பரிசு யாரும் தந்ததில்லை” என்று கூறினார்.