July 5, 2017 தண்டோரா குழு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக முதியவர்களைப் புலிக்கு இறையாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது பிலிபித் புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தை சுற்றியுள்ள கிராம பகுதியில் அடிக்கடி புலிகள் தாக்கி முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் புலிகள் தாக்கி 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
இந்நிலையில்,முதியவர்கள் அடிக்கடி இறப்பது குறித்து பிலிபித் புலிகள் சரணாலயம் அருகில் உள்ள கிராம பகுதியில் வனவிலங்கு குற்றத்தடுப்பு அமைப்பின் அதிகாரி கலீல் அத்தர் பிலிபித் ஆய்வு நடத்தினார்.
அதில், அரசு தரும் இழப்பீட்டிற்காக அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களைக் காட்டுக்குள் அனுப்பி புலிக்கு இறையாக்குவதாகத் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், காட்டில் புலி தாக்கி உயிரிழக்கும் முதியவர்களின் உடல்களை எடுத்து வந்து ஊருக்குள் போட்டுவிடுகின்றனர். இதைத் தொடர்ந்து புலிகள் காட்டில் இருந்து ஊருக்குள் நுழைந்து மக்களைத் தாக்குவதாக கூறி இழப்பீடு பெறுகின்றனர். முதியவர்களும் தங்கள் குடும்பத்தின் வறுமை நிலைமையை உணர்ந்து காட்டுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர் என கூறப்படுகிறது.