July 6, 2017 தண்டோரா குழு
எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது இயல்பு தான் என்று மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில்,
“முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கொலைக்கான தடயங்கள், ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை , கொள்ளை நடப்பது இயல்புதான். குற்றங்களுக்கு எப்படி தீர்வு காண்கிறோம் என்பதில் தான் அரசின் செயல் இருக்கிறது.
கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கின்றனர். திமுக ஆட்சியில் எவ்வளவு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது பற்றி புள்ளி விவரம் சொல்ல முடியும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.” என்றார்.