July 6, 2017
தண்டோரா குழு
கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது, ஆகையால் ஆளுநர் நியமித்த 3 எம்.எல்.ஏகளின் நியமனம் செல்லாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“புதுச்சேரியில் மத்திய அரசு, மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு ஆளுநர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த செயல் கண்டனத்திற்குரியது.
தற்போது பதவியேற்றுள்ள பா.ஜ.க வை சேர்ந்த சாமிநாதன் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது.
இதனால் இவர்களது இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர் இருக்கும்போது ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலமுறை மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்திலும் அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் செய்வேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.