July 10, 2017 தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக அம்மாநில அரசு வழங்கியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி காஷ்மீர் மக்களவை தொகுதிக்குக் இடைத்தேர்தல் நடந்தது. அத்தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது,பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டும் வாக்குச் சாவடிகளைத் தீ வைத்தும் கொளுத்தினர்.
பாதுகாப்புப் படையினர் மீது கும்பல் கல்வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர்.
இந்நிலையில், கல்வீச்சு நடந்த போது, ராணுவ வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஃபரூக் அகமத் தார் என்ற இளைஞரை பிடித்து ஜீப்பில் கட்டி வைத்து, மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு மனித நல அமைப்புகள் ராணுவத்தினரின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக அம்மாநில அரசு வழங்கியிருக்கிறது.
இதற்கான ஆணையை ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம் அம்மாநில அரசுக்கு இன்று (திங்கட்கிழமை) அனுப்பியுள்ளது.சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.