July 11, 2017 தண்டோரா குழு
கோவையில் காசோலை மோசடி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை உப்பிலிப்பாளையத்தில் ‘குளோபல் இன்டியா இன்டர்நேஷனல் திரட் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாக இயக்குநர் தினேஷ்குமார் என்கிற புருஷோத்தமன், விற்பனை மேலாளராக ராஜா என்கிற வெங்கடபதி ஆகியோர் தங்களுடைய நிறுவனத்திற்கு நூல் தேவை என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தனர். இதை பார்த்த கோவை சவுரிபாளையத்தில் உள்ள கண்ணபிரான் மில்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேலுசாமி, இருவரையும் அணுகியுள்ளார்.
அப்போது ரூ.63.79 லட்சம் மதிப்புள்ள நூல் கண்ணபிரான் மில்ஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது. இதற்காக முன்பணமாக ரூ.37.69 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.26.10 லட்சம் பணத்திற்கு தினேஷ்குமார் மற்றும் ராஜா ஆகியோர் 30 செக்கினை வேலுசாமியிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால், அனைத்து செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வேலுசாமி இதுகுறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, குளோபல் இன்டியா இன்டர்நேஷனல் திரட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சின்ன பழனிசாமி என்பதும், இந்த நிறுவனத்தில் தினேஷ்குமார் மற்றும் ராஜா என யாரும் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வேலுசாமி பணமோசடி குறித்து கடந்த 10.6.2002 அன்று, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷ்குமார் மற்றும் ராஜா இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், தினேஷ்குமார் மற்றும் ராஜா மீதான செக்மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேவலுசாமி இன்று தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால் 9 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.