July 12, 2017 தண்டோரா குழு
இலங்கை அகதிகள் முகாமில் எந்த தொடர்பும் இல்லாத இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டி காவல்நிலையத்தில் மண்ணெண்ணெய் கேன்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பூலுவபட்டியில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் கடந்த 8ம் தேதி விளையாட்டின்போது ஏற்பட்ட பிரச்சினையில் இந்து முன்னணி கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோருக்கும்,முகாமில் இருந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் முகாமைச் சேர்ந்த சார்லஸ் ஜெயசீலன் (எ) சுமன் (34),இந்து முன்னணி நிர்வாகி ரமேஷ் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தாக்குதலுக்கு உள்ளான சிவராஜா, சுமன், ரமேஷ் ஆகியோர் தனித்தனியாக ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்தனர்.
முதல் கட்டமாக சிவராஜா,ரஜினிகாந்த்,ஸ்டாலின்,துதீஸ்வரன்,கஜேந்திரன் ஆகிய 5பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்து முன்னணி நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட 7 பேர்மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிரஞ்சன் என்ற இளைஞருக்கு பதிலாக, அவரதுசகோதர் நிகிந்தன் என்பவரை புதனன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் திட்டமிட்டே காவல்துறையினர் இந்து முன்னணியினருக்கு சாதகமாக சம்பந்தமே இல்லாத முகாமை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்வதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி ஆலாந்துறை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பூலுவபட்டி முகாமில் இருந்து கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற இளைஞரை, ஒரு கைதியைப் போல பிடித்து வந்து விசாரிப்பது முற்றிலும் தவறானது. காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை எனக்கூறி முகாம் பெண்கள் சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் அங்கு வந்ததால் பரபரப் புஏற்பட்டது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆலாந்துறை காவல்துறையினர் நிகிந்தனை விடுவித்தனர்.
இதுகுறித்து அம்முகாம் மக்கள் கூறும்போது,
‘சொந்த நாட்டை விட்டு இங்கு வந்து 27 வருடமாக மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சினையால் சூழல்மாறிவிட்டது. இதை இயல்புநிலைக்கு கொண்டு வரவே விரும்புகிறோம். அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதால், அவர்களது குடும்ப உறுப்பினர்களை கைது செய்வது சரியானதல்ல. ஏற்கனெவே கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளோம். இதில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மேலும்அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்றனர்.
இதுகுறித்து ஆலாந்துறை காவல் ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் கூறும்போது,
விசாரணைக்காக மட்டுமே கரூரில் இருந்து ஒரு இளைஞரை அழைத்து வந்தோம்.அவரும் பூலுவபட்டி முகாமைச் சேர்ந்தவர் தான். பின்னர் அவருக்கு இதில் தொடர்பில்லை என்று மக்கள் தெரிவித்ததையடுத்து அவரை விடுவித்துவிட்டோம்’ என்றார்.