July 14, 2017 தண்டோரா குழு
பிரதமர் மோடி பெயரில் மீம்ஸ் வெளியிட்ட ஏஐபி (AIB) காமெடி குழுவைச் சேர்ந்த தன்மய்பட் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி போன்று உருவம் கொண்ட ஒருவர் ரயில் நிலையத்தில் நின்று ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், ஸ்டேண்ட் அப் காமெடி குழுவான ஏஐபி,ஸ்நாப்சாட் சமூகவலைதளத்தில் உள்ள டாக் ஃபில்டரை மோடி பயன்படுத்தி இருப்பது போன்ற மீம்ஸ் ஒன்றை பதிவிட்டனர். இது சமூகவலைதளத்தில் அதிகமாக பரவியது.
இதையடுத்து, ட்விட்டரில் அந்த அமைப்பினர் வெளியிட்ட புகைப்படத்தை மும்பை போலீசாருக்கு டேக் செய்து நெட்டிசன் ஒருவர் புகார் செய்தார். மேலும், இந்த மீம் பிரதமர் மோடிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனால் ஏஐபி குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர், தனது புகாரில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தன்மய் பட் தலைமையிலான ஏஐபி அமைப்பு மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.