July 14, 2017 தண்டோரா குழு
ரயில்வே ஊழியர்களுக்கான இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் பயனாளிகளுக்கு ரூ.1,15,44,748- வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ரயில்வே ஊழியர்களுக்கான 2017-ம் ஆண்டுக்கான இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றம் இன்று நடைபெற்றது.
இந்த மன்றத்திற்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை வகித்தார். சுமார் நூறு ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இதில் 20 புதிய மனுக்கள் உள்பட மொத்தம் 98 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள், 51 மனுக்களின் மீது முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு மொத்தம் ரூ. 1,15,44,748- வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களில், 27 மனுக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தீர்க்கப்படவில்லை.
இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், மற்றும் சேலம் கோட்ட பணியாளர் அலுவலர் எஸ். திருமுருகன், மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தங்களது குறைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது குறித்து ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர்.