July 14, 2017 தண்டோரா குழு
கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கோவை -பொள்ளாச்சி பயணிகள் ரயில் நாளை (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது.
கோவை-பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு துவங்கியது. சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. எனினும் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் இருந்துவந்தது.
இந்நிலையில் நாளை ( ஜூலை 15)கோவையில் இதற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. அதன்படி, கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் புறப்படுகிறது. அந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு வந்து சேருகிறது. இதனைத்தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவைக்கு 4.30 மணிக்கு சென்றடைகிறது.
துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்ளவுள்ளனர்.