July 22, 2017 தண்டோரா குழு
சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும், 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஔரங்காபாத் நகரை சேர்ந்த தரஞ்சித் சிங் கொலை குற்றத்திற்காக கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பின், மும்பை அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், மும்பை உயர்நீதிமன்றத்தில், குற்றவியல் முறையீடு மூலம் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து, 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பிறகும், சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. தண்டனை காலத்தோடு மேலும் 3 ஆண்டுகள் அவரை சிறையில் வைத்திருந்தனர்.
அதன் பிறகு வெளிய வந்த அவர், சிறைகாலம் முடிந்த பிறகும், தன்னை சிறையில் வைத்திருந்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஔரங்காபாத் பெஞ்ச் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் முடிவில், சிறைத்தண்டனை காலம் முடிந்த பிறகும், கைதியை 3 ஆண்டுகள் சிறையிலேயே வைத்திருந்த குற்றத்திற்காக, அவருக்கு நஷ்டயீடாக 2 லட்சம் ரூபாயை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்பளித்தனர்.