May 26, 2016 தண்டோரா குழு.
எங்கும் வேலைக் கிடைக்காத காரணத்தினால் உதவாதவன் என்று தனது திறமையைக் குறைத்து மதிப்பிட்ட கிராம மக்களே வியக்கும் வண்ணம் ஒரு மிகப் பெரிய சாதனையை நடத்திக் காட்டியவர் முஸஃபர் நகரின் 26 வயது அப்துல் வாஜித். ஒரு இருக்கை கொண்ட விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கேசர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாஜித். பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்துக் கல்லூரிப் படிப்பை டெல்லியில் தொடர்ந்துள்ளார். படிக்கும் காலத்தில் NCC யில் சேர்ந்து விமானத்தின் அமைப்பது பற்றி, சஃடார்ஜங் விமானநிலையத்தின் பயிற்சி முகாமிலும், பல்வேறு பயிற்சி மையங்களிலும் கற்றுத் தேர்ந்துள்ளார். ரிமோட் கண்ட்ரோல் மூலம் விமானத்தை இயக்குவதில் மிகச் சிறந்தவராக விளங்கியுள்ளார்.
பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை என்றவுடன் தனது முழுத் திறமையையும் உபயோகித்து பள்ளியில் கற்ற விமானம் உருவாக்கும் முறையைப் பின் பற்றி ஒரு சிறிய விமானத்தை உருவாக்குவதில் வெற்றியும் பெற்றார்.
தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், மற்றும் கிராமப் பெரியவர்களிடமும் பெற்ற 5 லட்சம் ரூபாய் தொகையில் இப்பணியை நிறைவேற்றியுள்ளார். இதை வானில் செலுத்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதி பெறவேண்டும்.
தன்னுடைய இந்த முயற்சி கண்டிப்பாக அமைச்சகத்தின் கவனத்தை ஈர்க்கும், அரசு தனக்குத் தகுந்த வேலை வாய்ப்பும் தரும். மேலும் தன்னுடைய திறமையை உபயோகிக்க அரசு ஆவன செய்யும் என்றும் அப்துல் வாஜித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது போன்ற தொழில் ஆர்வமிக்க, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்க உத்திரப்பிரதேச முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சுமார் 350 கிலோ எடையும், ஒரு மீட்டர் நீளமும், இரண்டு எஃகுச் சட்டமும் கொண்டது இவருடைய சிறிய விமானம். முதலில் பைக் இயந்திரத்தை உபயோகித்துள்ளார். ஆனால் விமானத்தை இயக்கும் அளவிற்கு அவை வலிமையாக இல்லாததால், மாருதி வேனின் இன்ஜினை உபயோகித்துள்ளார். இவருடைய விமானம் 25 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது. வானில் 10 கிலோ மீட்டர் ஓடக்கூடியது.
அரசின் ஒப்புதல் கிடைத்த பின் பாதுகாப்பிற்காக ஒரு பாராசூட் வைத்துக் கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். அப்துல் வாஜித் மிகுந்த விடாமுயற்சியுள்ளவர். எடுத்ததை முடிக்கும் மனத் திண்மை படைத்தவர் என்று வாஜித்தின் பயிற்சி ஆசிரியர் பாராட்டியுள்ளார்.
முதலில் வாஜித்தின் முயற்சியைப் பொழுது போக்காக நினைத்து அலட்சியமாக இருந்த கிராம மக்கள், அது முழுமையடைந்தவுடன் அதைத் தங்களது சாதனையாகவே கருதி அனைத்து ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வருவதாக கிராமத் தலைவர் முகமது அக்லாக் தெரிவித்துள்ளார்.
முசபர் நகர் மாவட்ட உப நீதிபதி ஆய்வுக்கு வந்த போது, ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கே உண்டு என்றும் அதன் விதி முறைகளைத் தான் தெரிந்து சொல்வதாகவும் கூறியுள்ளார்.
தொலைதூரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து கொண்டு விமானத்தை நிர்மாணிக்க முடியும் போது, அதே முயற்சியுடன் தன்னால் அரசின் அனுமதியையும் பெற முடியும் என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாஜித் கூறியுள்ளார்.
தோல்வியை எதிர்த்துப் போராடத் துணிவில்லாமல் பல முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும், இன்றைய இளைய சமுதாயத்தினர் வாஜித் போன்ற சாதனையாளர்களை நினைவு கூர்தல் நல்லது.