July 31, 2017 தண்டோரா குழு
உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ்,
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். அவரின் நிபந்தனை ஏற்றக் கொள்ளப்பட்டதால் தான் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைந்ததாகவும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவிதிவிலக்கு பெற்று தான் உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளதாக கூறினார்.
மேலும்,மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது. அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். தற்போது உள்ள பொது விநியோகத்திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை.ரேஷன் பொருட்கள் இல்லை என்பது வதந்தி எனவும் உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்ந்ததற்கு அடையாளமாக தான் அரசாணை வெளியிடப்பட்டது எனவும் கூறினார்.