August 3, 2017 தண்டோரா குழு
ஏமன் நாட்டில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக Save The Children அமைப்பு தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், புரட்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஏமன் நாட்டு போரினால், 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமலும், அந்நாட்டு மக்களில் பெரும்பாலோனருக்கு சரியான உணவு கிடைக்காமலும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அந்த போரினால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான். அவர்களால் எழுந்துக் கூட நிற்க முடியாமல், பசியால் வாடி இறந்து வருகின்றனர்.
இதேநிலை தொடர்ந்தால், ஏமன் நாட்டில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த குழந்தைகளை காப்பாற்ற சரியான நடவடிக்கையை உடனே எடுக்கவேண்டும் என்று சர்வதேச Save The Children அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஏமன் நாட்டில் காலேரா நோய் பரவி வருகிறது. குழந்தைகளும் பெரியவர்களுக்கும் சரியான உணவு கிடைக்காததால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் இது வரை 1,900 உயிரிழந்துள்ளனர், 425,000 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.