August 4, 2017 தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூரில் தொடங்க இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
அதன் பின் அமைச்சர் தெரிவிக்கையில்,
“தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) தொடங்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.எனவே தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் மேலும் இந்த கல்வி ஆண்டிலேயே தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.