May 28, 2016 தண்டோரா குழு.
உத்திரப் பிரதேசத்தில் கசியாபாத்தில் உள்ள ஷிப்ரா சன் சிட்டி போலீஸ் ஸ்டஷனில் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர் ராகுல்காந்தி ஒரு வண்டியோட்டி எனப்பதிவு செய்யப்பட்ட படிவம் கோப்புகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டு வேலைக்கு, வண்டியோட்டுவதற்கு, மற்றும் பல பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யுமுன் அவர்களுடைய நடத்தை, நடவடிக்கை, மேலும் குடும்பப் பின்னணியை அறியும் பொருட்டு, முதலாளிகள் காவல்துறையை நாடுவது வழக்கம். நபரின் பெயர், தந்தையின் பெயர், தொழில் முகவரி போன்ற பலவிதத் தகவல்களைப் படிவத்தில் நிரப்பிப் புகைப் படத்துடன் காவல்துறைக்கு அனுப்புவர்.
வேறு ஏதாவது இடத்தில் குற்றச்செயல் புரிந்து விட்டு மற்றோரு இடத்தில் அடைக்கலம் புகுவோரை கண்டுபிடிக்கும் வகையிலும் இந்த விதியைக் காவல்துறை அமுல்படுத்தியுள்ளது.
இங்ஙனம் வரும் படிவங்களைப் பரிசோதித்து, குற்றப் பின்னணி மற்றும் சமூகக் குற்றங்கள் ஏதுமற்ற நபர்களின் முகவரியின் உண்மைத் தன்மையைச் சோதிக்க அந்த முகவரிக்குச் சென்று விசாரிப்பர்.
இந்தச் செயல் முறையின் போது காங்கிரஸ் உபதலைவர் ராகுல்காந்தியின் புகைப்படம் பொருந்திய படிவம் இந்திராபுரத்தில் உள்ள அருண்சர்மா வீட்டிற்கு அனுப்பப்பட்டது.
படிவத்தில் பெயர் என்ற இடத்தில் ராகுல்காந்தி, தந்தையின் பெயர் ராஜீவ்காந்தி, முகவரி, வீட்டு எண்.12, துக்ளக் லேன், டெல்லி. மற்றும் ஓட்டுநர் எனவும் கொடுக்கப்பட்டிருந்தது. தொழில் அரசியல் என்றும், மணமாகாதவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் படிவத்தைக் கண்ட அந்தத் தொகுதி, மக்கள் நலச் சங்கத்தினர் காவல்துறையை அணுகி உயர் போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
உண்மையில் அந்த முகவரியில் வசிக்கும் காந்தி ஸ்கியோன் காரோட்டிப் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார்.
இந்தத் தவறு எப்படி நடந்தது என்று காவல்துறையினரால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் இது போன்று ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வேண்டி அனுப்பப்படுகின்றன. இது யாரேனும் வேண்டுமென்றே செய்த குறும்புச் செயலாக இருக்கும் என்று கூறியுள்ளனர். எனினும் விண்ணப்பம் கொடுத்தவரிடமும், பரிசீலனை செய்தவரிடமும் தகுந்த விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட படிவம் முன்பு உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பழைய படிவம் என்றும், தற்பொழுது புதுப்படிவமே உபயோகப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.