August 7, 2017 தண்டோரா குழு
ஜெர்மன் நாட்டு பாராளுமன்றம் முன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கோஷமிட்ட இரண்டு சீன சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெர்மன் நாட்டை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு சீன சுற்றுலா பயணிகள், ஜெர்மன் பாராளுமன்ற மன்றத்திற்கு முன் நின்றுகொண்டு, ஹிட்லரின் படையான ‘நாசி யுக’ போர் வீரர்கள் போல் போஸ்களை கொடுத்து கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் ‘ஹிட்லர் வாழ்க’ என கோஷமிட்டனர்.
அவர்களை ஜெர்மன் நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் 500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது.
1933-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை அடால்ப் ஹிட்லர் ஜெர்மனி நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் நாசி ராணுவத்தினர் ‘ஹிட்லர் வாழ்க’ என்று சொல்லும் முறையை பின்பற்றி வந்தனர். ஆனால், அந்த முறை வெறுப்பின் அடையாளமாக இருந்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு அந்த முறை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.