August 10, 2017 தண்டோரா குழு
தமிழக சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையாக தான் உள்ளது, சென்ற ஆண்டு மட்டும் சிறைகளில் இருந்து 283 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 187 செய்யப்பட்டுள்ளன என சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,
“கோவை மத்திய சிறை 1872 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமை மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த சிறையில் தற்போது 1720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனியாக சிறை உள்ளது.
இந்த சிறை வளாகத்தில் பல ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ளன. புதிதாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு 2 ஆயிரம் மரகன்று தற்போது நடவு செய்யப்பட்டுள்ளன. நடவு செய்யப்பட்டுள்ளன மரகன்றுகளுக்கு சிறைவாசிகளே தண்ணீர் ஊற்றி பாராமரித்து வருகின்றனர்.
சிறைக் கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் சிறைக்கைதிகளுக்கென டெக்ஸ்டைல் மில் செயல்பட்டு வருகிறது. அதில் காவலர்களுக்கான காக்கி துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் முழுவதும் உள்ள சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் 6 ஆயிரம் பேர் கல்வி பயின்று வருகின்றனர். கோவை மத்திய சிறையில் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 கைதிகளுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றுவதே எங்களது நோக்கம்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் வெளியே செல்லும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது. கோவையில் விரைவில் செயல்படாமல் இருக்கும் ப்ரிசன் பசார் மீண்டும் திறக்கப்படும். தமிழக சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையாக தான் உள்ளது. சென்ற ஆண்டு மட்டும் சிறைகளில் இருந்து 283 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை 187 செய்யப்பட்டுள்ளன.”
இவ்வாறு சைலேந்திர பாபு கூறியுள்ளார்.