August 10, 2017 தண்டோரா குழு
நேபாளத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது, வீட்டைவிட்டு வெளியே அனுப்பினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது, பெண்கள் அசுத்தமானவர்கள் என்று கருதி, அவர்களை வீட்டில் சேர்ப்பதில்லை. அந்த நாட்களில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அப்போது அவர்கள் காட்டு பகுதியில் ‘சௌகாத்’ என்று அழைக்கப்படும் வீடுகளில் போய் தங்க வேண்டும்.மேலும் அவர்கள் உணவுப்பொருட்கள், பூஜைப்பொருட்கள், விலங்குகள் ஆகியவற்றை தொடக்கூடாது என்பது வழக்கம்.
கடந்த மாதம், சுமார் 16 வயது பெண், ‘சௌகாத்’ வீட்டில் தங்கியிருந்தபோது, பாம்பு கடியால் உயிரிழந்தார். கடந்த 2016ம் ஆண்டு, மாதவிடாய் காலத்தில், சௌகாத் வீட்டில் தீ பிடித்ததில், அதில் தங்கியிருந்த 2 பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சமூக அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், இயற்கையானது. அந்த நேரத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி, தீண்டத்தகாதவர்கள் போல் அவர்களை நடத்தினால், 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கி, 2,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டம் ஒன்று நேபாளத்தில் அமலுக்கு வந்துள்ளது.