August 11, 2017 தண்டோரா குழு
சீனாவில் பிறந்த பெண் குழந்தையை கொரியர் மூலம் பார்சல் செய்து, அநாதை இல்லத்திற்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சீனாவின் புஜியன் மாகாணத்தில் புஷோ நகரை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால், அந்த குழந்தையை பார்சல் செய்து, ஒரு அநாதை இல்லத்திற்கு அனுப்ப திட்டமிட்டனர். அதன்படி, அந்த குழந்தையை ஒரு பார்சலாக தயார் செய்தனர். அந்த பார்சலை கொண்டு செல்ல, கொரியர் அலுவலகத்திற்கு தகவல் தந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த அலுவகத்திலிருந்து வந்த டெலிவரி பையனிடம், அந்த பார்சலை எடுத்து செல்லும்படி கொடுத்துள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது, அவர்கள் அதற்கு சரியான பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனும் அதை தனது சைக்கிளின் முன் பகுதியில் வைத்துக்கொண்டு எடுத்து சென்றான்.
ஆனால், போகும் வழியில் குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்ட அவன், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த பார்சலை திறந்துள்ளான். அதில் பிறந்த பெண் குழந்தை இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளான். உடனே, அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தந்துள்ளான்.
தகவல் அறிந்த அவர்கள், உடனே ஜின் ஆன் மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளனர். காவல்துறையினரும், மருத்துவ குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்த குழந்தையை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, அந்த குழந்தையை ஜின் ஆன் மருத்துவமனைக்கு எடுத்து சென்று, குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டி, அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு, குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த குழந்தையின் பெற்றோரை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் புஷோ நகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.