May 31, 2016 தண்டோரா குழு.
பத்தாம் வகுப்பு CBSE தேர்வின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மணிப்பூரில் 73 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்விற்கு அனுப்பப்பட்ட மாணவ மாணவிகளில் ஒருவர் கூடத் தேர்ச்சி பெறவில்லை.
அரசின் பதிவுப்படி 6,484 மாணவ மாணவிகள் 323 அரசுப் பள்ளியிலிருந்து தேர்வு எழுதியுள்ளனர். அதில் 73 பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய ஒருவர் கூடத் தேர்ச்சி பெறவில்லை.
அரசுப் பள்ளியின் மாணவ மாணவிகள் 2,781 பேரே 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்தம் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 42.8 சதவிகிதம் ஆகும்.
மீதமுள்ள பள்ளிகளில் 28 அரசுப் பள்ளியில் பள்ளிக்கு ஒரு மாணவரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளியில் படிப்பவர்கள் சிறப்பாகத் தேர்ச்சியடையும் போது, அரசுப் பள்ளியில் மட்டும் இந்த நிலை ஏன் என்பது எல்லோருடைய கேள்வியாகவும் உள்ளது.
மக்களின் வரிப் பணத்தின் அதிகளவு பணம் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு அரசு செலவழிக்கும் போதும் இந்த நிலை ஏற்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது, அதனால் தரமற்ற பள்ளிகளை மூடுவது தவிர வேறு வழியில்லை என் அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு 28 அரசுப் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 48 பள்ளிகளாகவும், 2015ம் ஆண்டு 70 பள்ளிகளாகவும் உயர்ந்தது.
இந்த மோசமான நிலைக்குக் காரணம் பற்றிக் கல்வித்துறை அதிகாரிகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பள்ளிகளை மூடுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகும், ஆனால் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முயற்சிப்பதைக் காட்டிலும் பள்ளிகளை மூடுவதே மிகச் சிறந்தது என்று அரசு முடிவெடுத்துள்ளது.
செல்வந்தர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்துவிடுகிறனர். ஆனால் வசதி குறைந்த ஏழை மக்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாகிவிடுகிறது என்று ரோமன் சிங்க்தாம் என்ற மாணவனின் தந்தை தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசு ஏற்கெனவே இம்பாலிலுள்ள டோம்பிசானா உயர் நிலைப்பள்ளியை மூடி வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்திருக்கிறது. அதே போல் அரசின் பெங்காலி உயர் நிலைப்பள்ளி மூடப்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் உயர் நிலைப்பள்ளி நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.