May 31, 2016 தண்டோரா குழு.
கம்ப்யூட்டர் என்பது தற்போது ஒரு சாதாரண விசயமாக இருந்தாலும் அதில் உள்ள பாகங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். ரேம் என்பது கணினியின் சேமிப்புக் கிடங்கில் இருந்து வேலைகளைச் செய்யும் ப்ரோஷசருக்கு டேட்டாக்களை எடுத்துச் செல்ல இடைத்தரகராக வேலை செய்யும் ஒரு தற்காலிக சேமிப்பு இடம்.
கணினியின் வேகத்தை கூட்டிக் குறைப்பதில் கணினியின் ரேம் அதிக பங்கு வகிக்கிறது. (மற்ற காரணிகளும் வேகத்தைக் கட்டுப்படுத்தினாலும் ரேம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது.) ஆரம்பக் கால கட்டத்தில் 64 எம்.பி ரேம், என்ற அளவில் இருந்தது. பின்னர் 128 எம்.பி, 512 எம்.பி என அதிகரித்து பின்னர் ஆயிரம் எம்பிக்கள் கொண்ட ஜி.பி என்ற அளவை எட்டியது.
பின்னர் அதுவும் படிப்படியாக அதிகரித்துக் கடந்த ஒரு வருடம் வரை அதிகபட்சமாக 64ஜி.பி ரேம் என்ற அளவே மிக அதிகமாக இருந்தது. தற்போது சாம்சங் நிறுவனம். அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே சிப்பில் உள்ள 128 ஜி.பி ரேமை தயாரித்துள்ளது. இது DDR4 தொழில் நுட்பத்தில் இயங்க வல்லது என்பதால் புதிய கணினி மதர் போர்ட்களில் மட்டுமே இயங்கும் என்பது
ஒரு குறையாக உள்ளது. ஆனால் இதன் மூலம் மிகப்பெரிய சர்வர் மாடல் கணினிகளும் இனி வேகமாக இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள செல் போன்களில் மொத்த சேமிப்பு திறனே 128 ஜி.பிக்கள் தான் என்னும் நிலையில் கணினியின் தற்காலிக சேமிப்பு பகுதியான ரேம் 128 ஜி.பி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய விஷயம் எனக் கணினி வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் தற்போது இயங்கும் கணினியின் சர்வர்கள் மேலும் இருமடங்கு வேகத்தில் இயங்கவைக்க முடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற புதிய புதிய கண்டுபிடிப்பினால் மனிதனின் வாழ்க்கை மேலும் மேலும் வேகமாக மாறி வருகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.