August 15, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் ஊழல்களும், குற்றங்களும் நடந்தும் எந்த கட்சியும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தமிழக அரசை மீது் கமல் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கமல் இன்று முதல்முறையாக நேரடியாக முதல்வர் மீது ட்விட்டரில் அதிரடி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றன. முதல்வர் பதவி வகிப்பவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு மாநிலத்தில் ஊழல் குற்றங்கள் பெருகி மலிந்து கிடக்கிறது. இச்சூழலில் எந்த கட்சியும் ஏன் தமிழக முதலமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியில் தவறுகளும், ஊழலும் நடந்தால் மாநில முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வருவாரா என நடிகர் கமல் சவால் விடுத்துள்ளார்.