August 17, 2017
தண்டோரா குழு
நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை, கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி கூறினார்.
கடலூரில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இதில் முதல்வர் கூறியதாவது,
“புதிய வீராணம் திட்டத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கடலூரில் தான் தொடங்கியது. என்.எல்.சி., தனியார் மயம் ஆவதை தடுத்தவர் ஜெயலலிதா.
கடலூர் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.115 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 500 பேருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.260 கோடியில் கொள்ளிடம் கூட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்க 100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை தொடர்ந்து சந்திப்பது மீனவர்களின் விடுதலைக்காகத்தான். நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.”
இவ்வாறு அவர் கூறினார்.