August 18, 2017 தண்டோரா குழு
பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை அறியாமல் வீட்டில் 4 லட்சம் ரூபாயை வைத்திருந்த மூதாட்டி வியாழக்கிழமை(ஆகஸ்ட் 17) காலமானார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி,பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடியின் ஒற்றை அறிவிப்பால், மக்கள் பல சிக்கல்களை சந்தித்தனர்.ஆனால், கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள வரபுளா என்னும் இடத்தில், வசித்து வந்த சதி பாய் என்னும் 76 மூதாட்டிக்கு அந்த அறிவிப்பு தெரியவில்லையாம். 4 லட்சம் ரூபாயை வீட்டிலேயே வைத்திருந்தார். அந்த பணம் இனி செல்லாது என்று அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
“சதி பாயிடம் இருந்த 4 லட்சம் ரூபாயை மற்ற வரபுளா பஞ்சாயத்து உறுப்பினர்கள், அந்த பணத்தை மாற்றி தர முயன்றனர். ஆனால், அது முடியாமல் போனது.இதனால் அவருக்கு உதவி செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளனர்.
இது குறித்து வரபுளா பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறும்போது ,
சதி பாயிக்கு உதவ அமைத்த குழு அனைத்து ஆவணங்களுடன் சென்னைக்கு சென்றனர். ஆனால் பணத்தை மாற்றும் காலக்கொடு முடிந்துவிட்டதால், அதை மாற்ற முடியாது என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிதி அமைச்சகத்தின் உதவியை நாடினோம். ஆனால், அதிலும் பயனிலை. சாந்தி பாய்க்கு இருதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்ததால், அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்தோம். அவருடைய நிலை மோசமாக இருப்பதைக் கண்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் அவர் நேற்று(ஆகஸ்ட் 17) காலமானார். அவருடைய மகளும் கணவரும் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.
சாந்தி பாய், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கால்நடை மருந்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு சிறிய வீட்டில், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்பதை அறியாது, பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது தான், அது குறித்து தெரியவந்துள்ளது.தன்னிடமிருந்த 4 லட்சம் ரூபாயை மாற்ற பல முயற்சிகள் எடுத்தும் அதை மாற்ற முடியவில்லை.
இதுக்குறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள், வீட்டை சோதனை செய்த போது, ஒரு பிளாஸ்டிக் பையில் 4 லட்சம் ரூபாய் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த தொகையை தவிர 10 லட்சம் ரூபாய் அவருடைய சேமிப்பில் இருப்பதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தன்னை ஏமாற்றி, தன்னிடமிருக்கும் பணத்தை எடுத்து சென்றுவிடுவர் என்று அதை வீட்டிலேயே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.