August 19, 2017 தண்டோரா குழு
போலீஸ் ஆக வேண்டும் என்ற மனநலம் குன்றிய இளைஞரின் ஆசையை சென்னை மாநகர காவல்துறையினர் நிறைவேற்றினர். சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ராஜீவ் தாமஸ் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது மகன் ஸ்டீவன்(19). மனநலம் குன்றியவர். ஆனாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும், அதுமட்டுமல்லாது தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர். எனினும் ஒரு காவல் அதிகாரியாகி மக்களுக்காக பணிபுரிய வேண்டும் என்பதே அவரது கனவு. இதனை நிறைவேற்ற உதவக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் AK விஸ்வநாதனுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பினார்.
இதையடுத்து, ஸ்டீவனின் கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகர ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தி.நகர்காவல் துணை ஆணையரை நியமித்தார்.ஸ்டீவனின் பெற்றோரை தொடர்புகொண்டு தேவையான ஏற்பாட்டினை செய்து நேற்று ஒருநாள் அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரானர் ஸ்டீவன்.
காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, வாக்கி டாக்கியில் பேசி, காவல் துறை வாகனத்தில் ரோந்து சென்று உதவி ஆய்வாளராகவே பணியாற்றினார்.
தன் கனவு நிறைவேறியதில் ஸ்டீவனுக்கு மிகுந்த பெருமிதம். மகனின் மனநிறைவை கண்ட அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். இதில் காவல்துறையினருக்கும் மனநிறைவு.
இதனைத்தொடர்ந்து ஸ்டீவனின் கனவை நனவாக்க உதவிய மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஸ்டீவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.