August 22, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள்,எருதுகள்,எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில்,
“தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் “தேசிய கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசித்திட்டத்தின்”கீழ் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு பன்னிரண்டாவது சுற்று தடுப்பூசிப்பணி முடிவடைந்துள்ளது.
தற்பொழுது செப்டம்பர் முதல் 21 நாட்களுக்குள் பதிமூன்றாவது சுற்று தடுப்பூசிப்பணி தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள 100லட்சம் எண்ணிக்கை பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்படவுள்ளது.
கால் மற்றும் வாய் (கோமாரி) நோயானதுகுறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்குபொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும்கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு,கறவை மாடுகளில் சினை பிடிப்பு கடைபடுவது,இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் இதனால் பொருளாதார இழப்பு அதிகம்.
இந்நோய் பொதுவாக சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.
இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்,பால். உமிழ்நீர்,சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.”
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.