August 28, 2017 தண்டோரா குழு
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ஆன்மிகவாதி ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் ராம் ரஹீம்சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தண்டனை குறித்த விவரம் திங்களன்று (இன்று) வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ராம் ரஹீம்சிங் ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பையடுத்து ராம் ராஹீமின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில்30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்நிலையில், ராம் ரஹீமுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஜக்தீப் சிங், சிறையில் வைத்தே அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டது. அதைபோல், நீதிபதி ஜக்தீப் சிங்கை ஹெலிகாப்டரில் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஹரியானா மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று ஹெலிகாப்டர் மூலம் சோனாரியா சிறைக்கு வந்த நீதிபதி ஜக்தீப் சிங், ராம் ரஹீமின் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்பாக, இருதரப்பினரும் இறுதிவாதத்தை முன்வைக்க தலா 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தார்.
ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், ராம் ரஹீம் தரப்பில், அவர் மக்களின் நன்மைக்காக உழைத்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு நீதிபதி தண்டனை விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜக்தீப் சிங் உத்தரவிட்டார்.
தற்போது ராம் ரஹீமிற்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின் கைதிக்கான சீருடை வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்ட தண்டணையை அடுத்து ஹரியானாவில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஹரியானாவில் பல்வேறு இடங்களில் 144தடை உத்தரவு அமல், முக்கிய இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.