August 31, 2017 தண்டோரா குழு
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் புளூவேல் கேமை உருவாக்க பின்னணியில் செயல்பட்டதாக 17 வயது பெண்ணை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர்.
இணையதளங்களில் புளுவேல் சேலஞ்ச் என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டு உள்ளது. 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது விதி. இதற்கிடையில் இந்த கேம்மை விளையாடியவர்கள் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஏனெனில், இந்த விளையாட்டில் கடுமையான சவால்கள் 50 நாட்கள் வழங்கப்படும். உதாரணமாக ‘உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று அப்போது தான் நீ வெற்றி பெறுவாய் என்றெல்லாம் கூறப்படும்.
ஆனால், நீங்கள், இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த ‘கேம்’மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும்.
இதனால் உலகில் பல இளைஞர்கள் இந்த கேம் விளையாடி தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புளூ வேல் கேம் உருவாக்க முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டதாக கூறி 17 வயது பெண் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அவரது வீட்டில் சோதனை செய்த போலீசார் கொடூரமான வரைப்படங்கள், புளூ வேல் சவால்களை உருவாக்கியவரும், நிறுவனரான 22-வயது பிலிப் புடெய்கின் வரைபடம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.