September 1, 2017 தண்டோரா குழு
அரசியலை கற்க ஒரு கல்விச் சுற்றுலா போல் கேரளாவிற்கு வந்துள்ளேன் என முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்தும் தமிழக அரசு குறித்தும் பேட்டிகளிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், டிவிட்டரிலும் பேசி வருகிறார். இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசியதோடு அவருடன் ஓணம் விருந்து சாப்பிட்டார்.
பின்னர் கமல் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த வருடம் ஓணத்தின்போதே முதல்வரை சந்திப்பதாக இருந்தது. சிறு விபத்தில் நான் அப்போது சிக்கிக்கொண்டதால் பங்கேற்க முடியவில்லை. எனவே இந்த வருட ஓணத்திற்கு வந்துள்ளேன். தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் அரசியலை கற்க கல்விச்சுற்றுலா போலவும் இங்கு வந்துள்ளேன். இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறினார்.
பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ விருதை தமிழில் சிவாஜிக்குப் பிறகு கமல்ஹாசன் வாங்கியது. இதற்காக ஒட்டுமொத்த திரை உலகமும் அவரை கொண்டாடியது. அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அவரை வாழ்த்தியிருந்தார்.அப்போது தான் ஒரு மலையாளி என்றும், தனது முதல்வர் பினராயி விஜயன் என்றும் கமல் குறிப்பிட்டு நன்றி கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.