September 5, 2017
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு நாளை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாலை விபத்து எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. எனவே, விபத்துகள், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 5 வரை இந்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
அதன் பின் நடைபெற்ற விசாரணையில் வரும் புதன் (நாளை) முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இதனால் நாளை முதல் வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.