June 6, 2016 தண்டோரா குழு
தனக்கு மறுவாழ்வு கொடுத்த காவலரை பட்டம் பெரும் விழாவிற்கு வரவழைத்த மாணவி, அந்த நெகிழ்ச்சியான தருணத்தை விளக்கியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. கடந்த 1998ம் வருடம் ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் அபொண்டே என்ற ஐந்து வயது குழந்தை தன்னுடைய மாமாவுடன் இருந்ததால் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அப்பகுதியில் பணியாற்றிய காவல் அதிகாரி அந்த தீயால் பாதித்த கட்டிடத்திற்குள் புகுந்து அதில் சிக்கித்தவித்த அபொண்டேவையும் அவரது மாமாவையும் காப்பாற்றி
வெளியே எடுத்து வந்தார். அப்போது அபொண்டே கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலையில் இருந்தார்.
ஆனால் அவரது மாமா ஏற்கனவே அதிக புகையை சுவாசித்த காரணத்தால் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் உயிருக்கு போராடிய அபொண்டேவை மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறை அதிகாரி பீட்டர் கேட்ஜ் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்றும் வரை உடனிருந்து கவனித்து வந்தார்.
அதற்கு காரணம் கூறும்போது, அபொண்டேவின் வயதை விட இரண்டு வயது குறைவாக தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் அபொண்டேவையும் தன்னுடைய குழந்தையாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பல வருடங்கள் அவளது உடல் நலனிலும், படிப்பிலும் அக்கறை செலுத்திய பீட்டர் கேட்ஜ் அபொண்டேவை தனுடைய மகள் போலவே பார்த்துக்கொண்டார். இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 23 வயதில் அபொண்டே படித்து இளங்கலைப் பட்டம் பெரும் நேரம் வந்தது.
அவர் ஈஸ்டர்ன் கோநேக்ட்டிகட் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெரும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது அபொண்டே அவரது வாழ்வில் முக்கியமானவர்களை அழைத்து கவுரவிக்க நினைத்தார்.
இதையடுத்து தனக்கு மறுவாழ்வு கொடுத்த காவல்துறை அதிகாரி பீட்டர் கேட்ஜ் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட முக்கியமானவர்களை அழைத்திருந்தார். இது குறித்து அபொண்டே கூறும்போது, காவல் அதிகாரி பீட்டர் மட்டும் அன்று சரியான நேரத்தில் என்னை காப்பற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்காவிட்டால், நான் இன்று இல்லை.
அதற்காகவே அவரை கவுரவிக்க நினைத்தேன். மேலும் அவர் என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு தருணத்தையும் உன்னிப்பாக கவனித்து வந்தவர் என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இது போன்ற ஒரு சந்தர்ப்பம் ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கும். அபொண்டேவை காப்பற்றிய புகைப்படம் பல செய்தித்தாள்களில் வெளிவந்தது. அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அன்று முதல் அவரும் எனக்கு ஒரு குழந்தைதான்.
அவளது வளர்ச்சி எனக்கு முக்கியமாக இருந்தது. பணி காலத்தில் ஒருவர் செய்யும் சாதனை ஏதாவது ஒன்று அவர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும் அது எனக்கு அபொண்டேதான் என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பீட்டர் கேட்ஜ் தெரிவித்தார்.