September 6, 2017 தண்டோரா குழு
பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அனைத்துப் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் நேற்று மர்ம நபர்களால் சுட்டுபடுகொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் அனைத்துப் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூத்த ஊடகவியாலாளர்கள் பேசுகையில்,
அண்மைக்காலமாக மக்கள் விரோத போக்குகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு உட்சபட்சமாக படுகொலையும் செய்யப்படுகிறார்கள்.கருத்து சுதந்திரத்தை கருத்துகளால் எதிர்கொள்ள திராணியற்றவர்கள் ஊடகவியலாளர்களை சுட்டுக் கொல்வது ஜனநாயக விரோதமானது.
பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கி,சமூக சீர்திருத்தவாதி கோவிந்த்பன்சாரே,நரேந்திர தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்ட முறையிலேயே அதாவது வெகு அருகில் இருந்து கௌரி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.எனவே, இதுபோன்ற வலதுசாரி பயங்கரவாதிகளிடம் இருந்து பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்காக நாடு முழுவதற்கும் உறுதியான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றனர்.
மேலும்,எங்களின் எழுத்துக்கள் வடிவில் கௌரி லங்கேஸ் வாழ்வார். அவரின் மதச்சார்பின்மை லட்சியத்தை முன்னெடுப்தற்கும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்துவதற்கும் கோவை ஊடகவியாலர்கள் தங்களின் பங்களிப்பை முன்னைவிட முனைப்பாக முன்னெடுத்துச்செல்வோம் என உரையாற்றினர்.
மேலும், அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு காரணமாக இருந்த நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும். தமிழகம் காலம் காலமாக காத்து வரும் சமூக நீதியை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் வலியுறுத்தினர்.
இறுதியில் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஸ், அரியலூர் அனிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்தப் போராட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள் பங்கேற்று, இந்தியாவில் அண்மைக்காலமாகப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.