June 7, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவின் நார்த் கரோலினாவிலுள்ள கோல்ட்ஸ் போரோவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது அண்டை வீட்டு 56 வயதான மார்சீல்லா ஜீன் லீ என்பவரிடம் உபயோகப்படுத்தப்பட்ட பிரீஜரை 30 டாலருக்கு வாங்கியுள்ளார்.
ஜீன் லீ அந்த பிரீஜரை அவரிடம் கொடுக்கும் போது, தான் அந்த பிரீஜரை அதிகம் உபயோகிப்பதில்லை எனவும், சர்ச்சின் ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்களுக்குத் தேவையான குறிப்புகளும், பொருட்களும், உபகரணங்களும் அதனுள் இருப்பதாகவும், சர்ச்சிலிருந்து ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சிலநாட்கள் ஆனா பிறகும் சர்ச்சிலிருந்து எவரும் வராத காரணத்தினால் பிரீஜரை வாங்கிய பெண்மணி அதைத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே இருந்த பொருள் அவரது நெஞ்சை உறையவைத்துள்ளது. இறந்த ஒரு பெண்ணின் உடல் அந்த பிரீஜரில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திடுக்கிட்டுப் பயத்தால் உறைந்த அப்பெண்மணி தொலைப்பேசியின் மூலம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த உடல் ஜீன் லீ யின் தாய் தான் எனத் தெரியவந்தது.
மிகுந்த சாந்தமான, நல்ல உள்ளம் கொண்ட அந்த 76 வயது தாயாரை மகள் எதற்காக இவ்வாறு அடைத்து வைத்தார் என்ற கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் எழுந்துள்ளது.
எனினும் ஜீன் லீ யின் தாயார் அர்மா அன் ருஷ் இயல்பான மரணமே அடைந்துள்ளார் எனப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஏன் அந்த உடலை பிரீஜரில் வைத்து விற்றுவிட்டுப் போனார் எனத் தெரியவில்லை.
பிரீஜரை விற்றவுடன் ஜீன் லீ வேறு ஊருக்குச் சென்று விட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து தாயாரின் மரணத்தைப் பற்றி அரசுக்கு அறிவிக்காத குற்றம் சுமத்தப்பட்டு ஜீன் லீ யை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.