June 8, 2016
தண்டோரா குழு.
கடந்த 1984ல் வெளியான மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் “ஸ்பிளாஷ்’ ஆகும். அந்தப் படத்தில் கடல் கன்னி வேடத்தில், பிரபல நடிகை டெர்லி ஹன்னா நடித்து இருந்தார். இடுப்புவரை பெண்ணின் உருவமும், இடுப்புக்குக் கீழே மீனின் உருவமும் கொண்டது தான் கடல் கன்னி.
இப்படத்தைப் பார்த்து அசந்து போனவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஹன்னா பிரேசர் என்னும் பெண்ணும் ஒருவர். அப்போது சிறுமியாக இருந்த பிரசேருக்கு, தானும் கடல் கன்னி போல் மாற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதனால், இளம் வயதிலேயே நீச்சல் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒன்பதாவது வயதிலேயே, செயற்கை வாலை தன் இடுப்பில் பொருத்தி, கடல் கன்னி போல் தண்ணீருக்குள் நீச்சலடிக்க துவங்கி விட்டார்.
இவரைப் பார்க்கும் அனைவருமே, “கடல் கன்னி’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்க ஆரம்பித்ததால் பிரேசருக்கு, மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
அவருக்குக் கடல் கன்னி மீதான காதல் அதிகரித்து விட்டது. நீச்சல் குளம், குளம், ஆறு என படிப்படியாக தன் நீச்சல் களத்தை மாற்றினார். அவர் தன்னுடைய 12வது வயதிலேயே ஆழ்கடல் நீச்சல் வீராங்கனையாக உருவெடுத்து விட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், தன் செயற்கை வாலுடன், கடலுக்குள் குதித்து அசல் கடல் கன்னியாக மாறி விடுவார்.
இதனால், டால்பின், சுறா, திமிங்கிலம் ஆகிய கடல் வாழ் உயிரினங்களின் மீது, இவருக்கு இனம் புரியாத பாசம் ஏற்பட்டுவிட்டது. திமிலங்கள் அதிகமாகக் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கடல் கன்னியாக அவதாரம் எடுத்தார் பிரேசர்.
மேலும், பசிபிக் பெருங்கடலில் உள்ள வாவு தீவுக்கு, புகைப்படக்காரர்களுடன் சென்று அங்குள்ள கடலில், பிரமாண்ட திமிங்கிலங்களுக்கு மத்தியில், கடல் கன்னி தோற்றத்தில் நீச்சலடித்தார். புகைப்படம் எடுக்கச் சென்றவர்கள் எல்லாம் பீதியில் அலற, பிரேசரோ சற்றும் பயமில்லாமல் திமிங்கிலங்களுடன் விளையாடினார்.
நல்ல வேளையாக, பிரேசருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்தப் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு திமிங்கிலங்களைப் பாதுகாப்பதை குறித்து பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2007ல் ஜப்பானில் உள்ள டாஜி தீவில், டால்பின்களுடன் கடல் கன்னி வேடத்தில் ஆழ்கடலில் நீச்சலடித்தார்.
கடலின் மேற்பரப்பில், 30 இசைக் கலைஞர்கள் தங்களின் வாத்தியங்களை இசைக்க, ரம்மியமான சூழலில் பிரேசரின் டால்பின் விளையாட்டு அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, 2009ல் மெக்சிகோவில் உள்ள தீவுக்கு சென்று 14 அடி உயரமுள்ள வெள்ளை சுறாக்களுடன், கடல் கன்னி உருவத்தில் நீச்சலடித்தார். தற்போது அவர், கடலில் 40 அடி ஆழத்தில் மூச்சை தம் கட்டி நீச்சலடிக்கும் அளவுக்கு, தன் திறமையை வளர்த்துள்ளார்.
தன் சாதனை குறித்து பிரேசர் கூறுகையில், கடல் வாழ் உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்கு சர்வதேச அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, நானும் ஒரு சிறு கருவியாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். சுறா, டால்பின், போன்றவற்றுடன் நீந்துவது பயமாக இருந்தாலும், அதில் ஒரு, த்ரில் இருக்கிறது. அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. மாறாக அனுபவித்தால் தான் தெரியும் என்று கூறினார்.