September 14, 2017 தண்டோரா குழு
கடந்த ஜூலை மாதம் முதல் பெட்ரோலின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஜூலை 1ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோலின் விலை 7 ரூபாய் 51 காசுகள் அதிகரித்துள்ளது.
கடந்த 16ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றபட்டு வருகிறது. அதன்படி ஜூலை 1ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 ரூபாய் 46 காசாக இருந்தது. அதுவே ஆகஸ்ட் 1ம் தேதி 2 ரூபாய் 25 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 71 காசாக விற்கபட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் பெட்ரோல் விலை உயர்வையே சந்தித்து வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி 71ரூபாய் 78 காசாக இருந்த பெட்ரோலின் விலை இன்று 72ரூபாய் 97 காசாக அதிகரித்துள்ளது. .
இதன்படி கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோலின் விலை 7 ரூபாய் 51 காசு அதிகரிருப்பது பொதுமக்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் அரசிற்கு எதிராக கடும் விமர்சங்கள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய புயல்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை திடீர் ஏற்றம் கண்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை தினசரி மாற்றியமைக்கும் முறை தொடரும் என்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குக் கீழ் அவற்றை கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.