September 14, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் குறித்தும் சமூக பிரச்சினைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்நிலையில், அவர் ஆங்கில இணையதள பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தனிக்கட்சி தொடங்குவீர்களா என்கிறார்கள். அதற்கு ஆம், அந்த எண்ணம் இருக்கிறது.
அரசியலுக்கு வரும் சூழலில் தனிக்கட்சி தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கபோவது இல்லை கட்டாயத்தின் பேரில் நடக்க இருக்கிறது. சமீபத்தில் நான் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப்போவதாக கூறினர்.
பல கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால், பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் இருக்கிறது. அரசியல் கட்சி என்பது கொள்கையை அடிப்படையாக கொண்டது.
எந்தவொரு கட்சியுடனும் எனது கொள்கையும், அடைய வேண்டிய லட்சியமும் ஒத்துப்போகும் என்று தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இருந்தே மாற்றத்தை தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். ஏன் தமிழகம் என்று கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறன்.
முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்கலாம் என்று நினைக்கிறன். அதேநேரம் மாற்றத்தை கொண்டுவர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால் இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என நினைக்கிறன். ஊழல் இருக்காது சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கிவிட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்கவும் மாட்டேன் நான் இருக்கும் இடத்தில் ஊழலும் இருக்காது.
நான் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டால் வாக்காளர் என் செயலை கணக்கெடுக்க வேண்டும். அவ்வப்போது ஓட்டு போட வேண்டியதில்லை. 5 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சொன்னதை நிறைவேற்றாவிட்டால் என்னை உடனடியாக கவிழ்த்து விடுங்கள். இதுதான் நம் நாட்டின் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர ஒரே வழி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.