September 19, 2017 தண்டோரா குழு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 11ம் தொடங்கிய இறுதி விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்பட்டது என்றும் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர் காவிரி நடுமன்ற தீர்ப்பு 2007-ம் ஆண்டு வெளியாகி 6 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2013-ம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து வாதித்த கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன் தமிழக அரசின் கோரிக்கைப்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் 2013ம் ஆண்டு அரசாணை வெளியிட்டும் இதுவரை நடுவர் மன்றம் அமைக்காதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் காவிரி வழக்கில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமுக தீர்வு காண மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.