September 20, 2017 தண்டோரா குழு
திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கி வரும் நிலையில் ஆண்டொன்றிற்கு சுமார் 24 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவனியை ஈட்டி தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நொய்யல் ஆற்றில் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் தொடந்த வழக்கில் அதிரடியாக சுத்தகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் கலந்துவிடும் சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே நவீன பொது சுத்தகரிப்பு நிலையங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக 18 பொது சுத்தகதிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூபாய் 200 கோடி வரை வழங்கி மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் ஆற்று நீருடன் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலிபாளையம் பகுதியில் சாய கழிவ நீர் ஆற்றில் கலந்ததால் 23 சாய ஆலைகளுக்கு சீல் வைத்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் அலட்சிய போக்கினை கைவிட்டு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினார்.