September 20, 2017 தண்டோரா குழு
மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 140க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் நேற்று(செப்டம்பர் 19) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1ஆக பதிவாகியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டின் நேரத்தின் படி, இந்த பூகம்பம் மதிய உணவு வேளையின்போது ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், அலுவலகங்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் 49 கட்டடங்கள் தரைமட்டம் ஆனது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.இடிப்பட்ட கட்டடங்களில் இடைப்பாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கடந்த 1985ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1௦,௦௦௦ பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் நினைவு நாளின் போது, மீண்டும் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மெக்ஸிகோ நாட்டின் மக்களுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளனர்.
“மெக்ஸிகோ மக்களுக்கு உதவ ஐநா உதவ தயாராக இருக்கிறது” என்று ஐநாவின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“உலக நாடுகள் மெக்ஸிகோவிற்கு உதவி செய்ய முன் வந்ததற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்” என்று மெக்ஸிகோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .