September 20, 2017 தண்டோரா குழு
நாட்டின் 3-வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
டி20, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இதுவரை தோனி 302 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9737 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதம், 66 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4876 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 சதங்கள், 33 அரைசதங்கள் குவித்துள்ளார். 78 டி20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று 1212 ரன்களை குவித்துள்ளார்.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பல சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுத்தந்தமையை கவுரவிக்கும் வகையில் பத்மபூஷன் விருதுக்காக மகேந்திர சிங் தோனி பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 36 வயதாகும் தோனி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.