September 21, 2017 தண்டோரா குழு
நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேணடும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்,
“கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்கள் தொற்று நோய் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், கிராமப்புறங்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல், உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினரால் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலை மேம்பாட்டுப்பணிகளின் நிலை, உள்ளாட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள், கல்வித்துறையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது, பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான வசதிகள், குறித்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தல் முற்றிலும் ஒழித்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேணடும்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்தவித சிரமமின்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.”
இவ்வாறு ஹர்மந்தர்சிங் தெரிவித்துள்ளார்.